Monday, September 10, 2012

அணுமின்சாரமும் , மக்கள் போராட்டங்களும்

உலக மின் நுகர்வோர்கள் வரும் காலங்களில் அணு மின்சாரத்தையே சார்ந்து இருக்க முடியும் எனும் பொய் பிரசாரத்தை முன் வைத்து இந்தியாவும் அணுமின் நிலையங்களை அமைக்க தொடங்கியது . இந்திய அரசு 63000MW மின் உற்பத்தி என்ற இலக்கை 2032 ம் ஆண்டிற்குள் ,அணுமின்சாரத்தின் வழியாக பெற திட்டமிட்டுள்ளது .  இதே இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட  அறிக்கையில் ௨௦௦௦ ஆவது ஆண்டில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி என்ற இலக்கை அடைவோம் என்று  கூறியது. ஆனால் இந்தியாவில் உள்ள ஆறு அணுமின் நிலையங்களிலிருந்தும்  2011 ஆண்டு வரை வெறும் 4780 MW என்ற இலக்கையே எட்ட முடிந்திருக்கிறது.  1990  களிலிருந்து ரஷ்யாவையும் , தற்பொழுது ஆஸ்திரேலியாவிடமும் உரேநியதிற்காக கையேந்தி கொண்டிருகிறது இந்தியா. அணு மின்சாரத்திற்கான செலவும் மிக அதிகம்.

உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் அணு மின்சாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேற்கு வங்கஅரசு தனது மாநிலத்தில், 6 ருசிய ரியாக்டர்களை கொண்டு 6000 MW மின்சாரம் உற்பத்தி செய்யகூடிய அணு மின் திட்டத்தை ஏற்காமல் தடுத்து நிறுத்தியது.  அணுமின்  நிலையங்களில் ஏதேனும் விபத்துகள் நடந்து சேதங்கள் ஏற்பட்டால் , யார் , எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பதிலும் தெளிவான வழி காட்டுதல்கள் இல்லை என்று கூறபடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்க கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, அதன் தொடக்க நிலையிலிருந்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய மற்றும் தமிழக அரசுகள்  தொடக்கதிலிருந்தே இந்த மக்கள் போராட்டத்தை அலட்சிய படுத்தி வந்தன. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த போராட்டங்கள் கூர்மைபடுதபட்டன.  கூடங்குளம் பகுதியை சாராத மக்கள் மனதில் , " இந்த திட்டத்தின் தொடக்கதிலிருந்தே இதனை எதிர்த்து கட்டுமான நிலையிலேயே எதிர்த்து இருக்கலாமே?  , இப்பொழுத் நிறுத்தினால் பல ஆயிரம்  கோடி மக்கள் வரி பணம் வீணாகாதா? என பல கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆனால் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அரசுகளால் புரந்தள்ளபட்டன என்பதும் , ஊடகங்களால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்பதுமே உண்மை.

நமக்கு மின் சக்தி மிக அவசியமானதுதான் , ஆனால் அது நம் மக்களின் வாழ்கையை அடகுவைத்து தான் பெறப்பட வேண்டுமா ? அரசு தற்பொழுது நிறுவியுள்ள அணுமின் நிலையம் மூன்றடுக்கு பாதுகாப்புடன் இருப்பதாக ஈற்று கொண்டாலும், நம் அறிவிற்கு எட்டாத புது விதமான இயற்கை பேரழிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அதனால் அணுகதிர் வீச்சு வெளியேறினால் எத்துனை ஆயிரம் மக்கள் பாதிக்கபடுவார்கள்? இன்றும் கல்பாக்கம் பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் பாதிப்புக்குளாகின்றனர்.
 கடந்த வார இறுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைகழக ஆய்வு குழுவினர் வெளியிட்ட அறிக்கை  காற்றின் மூலம்  1800 TW  மின்சாரம் பெற முடியும் என்று கூறுகிறது. இது உலக மின்தேவையான 18 TW போன்று 100 மடங்கு அதிகமானது.எனவே அரசு மக்களின் போராட்டத்திற்கு செவி மடுத்து , காற்று மற்றும் சூரிய மின் உற்பத்திகளை பெருக்கி நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதே  சாலச்சிறந்ததாகும்.

No comments: